சென்னை உயர்நீதிமன்றத்தில் போன் பே நிறுவனம் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் எங்களுடைய நிறுவனத்தின் சின்னம் மற்றும் லோகோ போன்று மொபைல் பே நிறுவனத்தின் சின்னமும் லோகோவும் இடம் பெற்று இருக்கிறது. எனவே மொபைல் பே நிறுவனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி இரு நிறுவனங்களின் சின்னமும் லோகோவும் ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும் சாதாரண மக்கள் பார்க்கும் போது ஒரே மாதிரியாகத்தான் தெரியும் என்றார்.
எனவே மொபைல் பே நிறுவனம் பணப்பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளக்கூடாது. பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்வதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஆனால் செயலியில் பணம் சேர்ப்பது போன்ற பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றார். மேலும் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவது தொடர்பாக இரண்டு நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு கூறி வழக்கை தள்ளி வைத்தார்.