வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதியன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து அனைத்து இடங்களிலும் தேர்தல் நடைபெற்றது. ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை அடுத்து, வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அதிமுக ,திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாளையோடு பிரச்சாரத்திற்கான கால அவகாசம் முடிய இருப்பதால் அதிமுக சார்பில் வேலூரில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது இரண்டாவது கட்ட பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார்.
இதையடுத்து திராவிட முன்னேற்ற கழகம் இதற்கு முன்பு நடைபெற்ற தேர்தல்களை காட்டிலும் வேலூர் தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் வேலூர் மாவட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள சோமநாதபுரம், சாத்தம்பாக்கம் குடியாத்தம் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் இவ்விடங்களை தாண்டி மேலும் ஒரு சில இடங்களிலும் அவர் பிரச்சாரம் பயணங்கள் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.