Categories
மாநில செய்திகள்

பாஜக விரும்பும் கலாச்சார திணிப்பு… வேதனையளிக்கும் பட்ஜெட்… முக ஸ்டாலின் காட்டம்…!!

 பாஜக விரும்பும் கலாச்சார திணிப்பை ஒரு நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது என்று திமுக ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2020-2021 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பின்னர் அவர் வாசித்த உரையில் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பாஜக விரும்பும் கலாசார திணிப்பை ஒரு நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. பட்ஜெட்டில் அர்த்தமுள்ள திட்டங்கள் எதையும் காண முடியவில்லை. மிக நீண்ட பட்ஜெட் உரைக்கு திசையும் தெரியவில்லை, திட்டங்களும் கிடைக்கவில்லை. ஆதிச்சநல்லூர் அகழாய்வு தவிர வேறு எந்த அறிவிப்பும் தமிழகத்திற்கு கிடைக்க வில்லை. நிதிநிலை அறிக்கை முழுவதும் கார்ப்பரேட்டுகளின் மீதான அக்கறையை நேரடி ஒளிபரப்பு செய்கிறது. வேலைவாய்ப்பு இழப்பை தடுத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களும் இல்லை என்றார்.

மேலும் அரசுக்கு தொலைநோக்கு பார்வையும் இல்லை, தொலைந்து போன பொருளாதாரத்தை மீட்க வழியும் தெரியவில்லை. சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று பெயர் சூட்டி தமிழர் நாகரிகம் முடிவுகளை மாற்றி வரலாற்றை திரிக்கும் முயற்சிநடக்கிறது. சமூகநீதி கொள்கையின் கட்டுமானத்தை சீர்குலைக்கும் வகையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் எவ்வித பலனும் பயனும் அளிக்காத நிலையில் நிதிநிலை அறிக்கை உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு திமுக சார்பில் மன நிறைவின்மையை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |