செங்கல்பட்டு அருகே பெரியாரின் சிலை உடைக்கப்பட்டதற்கு மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி உடைக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் முக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்துள்ளதாகவும், கையெழுத்து இயக்கத்துக்கு பின் கையெழுத்து பிரதிகளை பெற்று இந்திய நாட்டினுடைய ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளோம் என்று தெரிவித்தார்.
மேலும் செங்கல்பட்டில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. 95 ஆண்டு காலம் என் தமிழ் இனத்துக்காக, தமிழருக்காக குரல் கொடுத்த அந்தப் பெரியார் சிலை உடைப்பு என்பது வெட்கப்படவும், வேதனைபடவும் வேண்டியது. இந்த ஆட்சியாளர்கள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.