மகாராஷ்டிராவில் காணாமல் போன கொரோனா நோயாளியின் சடலம் 8 நாள் கழித்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல் மாநிலமாக திகழ்வது மகாராஷ்ட்ரா. இதற்கு காரணம் அப்பகுதி மக்களின் அலட்சியமும், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் என்று கூறப்படுகிறது. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் ஒன்று அங்கே நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் திடீரென மருத்துவமனையில் இருந்து காணாமல் போயுள்ளார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அவர் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில், கிட்டத்தட்ட எட்டு நாள்கள் கழித்து அவர் காணாமல் போன அதே மருத்துவமனையின் கழிவறையில் இருந்து அவரது உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஊரெல்லாம் தேடி அலைந்த காவல்துறை அதிகாரிகளும், மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனையின் கழிவறையில் ஒரு நிமிடம் தேடி இருந்தால், அவர் அப்போதே கண்டுபிடிக்கப்பட்டு இருப்பார். இதுபோன்ற அலட்சியங்கள் இருக்கும் வரைக்கும் பாதிப்பிலிருந்து மீள்வது கடினம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.