செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருக்கழுக்குன்றம் பகுதியில் கட்டிட தொழிலாளியான மனோகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரக்ஷயா (20) என்ற மகள் இருக்கிறார். கல்லூரி படிப்பை முடித்த ரக்ஷயாவுக்கு சிறு வயது முதலே அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதன் காரணமாக கல்லூரி படிப்பை முடித்த பிறகு பார்ட் டைமில் வேலை பார்த்து அழகி போட்டிக்கு தயாராகியுள்ளார்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு மோனா ஆக்டிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் பிறகு அரசு சார்பில் மலேசியா அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இதனையடுத்து மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலான அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு ரக்ஷயா வெற்றி பெற்றார். கடந்த 18-ம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை ஜெய்ப்பூரில் அழகி போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் ரக்ஷயா கலந்து கொண்டு மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றுள்ளார். இதைத்தொடர்ந்து நடைபெறும் மிஸ் இந்தியா அழகி போட்டியிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவது தான் தன்னுடைய நோக்கம் என்று ரக்ஷயா கூறியுள்ளார். மேலும் அந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக தன்னை தயார்படுத்தி வருவதாக ரக்ஷயா கூறியுள்ள நிலையில், மிஸ் தமிழ்நாடு படத்தை வென்றதற்காக அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.