மின்வாரிய ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பையில் மின்வாரிய அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சி.ஐ.டி.யு. தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மறுமலர்ச்சி சங்க துணைச் செயலர் கிருஷ்ணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அதில் தொழிற்சங்கங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மின்வாரிய ஊழியர்களுக்கு தமிழக அரசு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது.
இதனை கண்டித்து 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் தொ.மு.ச. கிளை தலைவர் கருத்தப்பாண்டியன், சங்கரன், கார்த்திகேயன், சி.ஐ.டி.யு. சுப்பிரமணி, மாரியப்பன், ஆனந்த், ஐக்கிய சங்கம் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.