திமுகதான் அதிமுகவுக்கு நிரந்தர எதிரி எனவும், ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் உதிரி எனவும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சார்பில் அலுவல் ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “விளம்பரத்திற்காக ஆடிட்டர் குருமூர்த்தி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குறித்து இழிவாகப் பேசியுள்ளார். அவருக்கும் அதிமுகவிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
குறிப்பாக, அதிமுக குறித்த தனிப்பட்ட நபர்களின் கருத்துகளை நாங்கள் மதிப்பதும் இல்லை. பதிலளிப்பதும் இல்லை. எங்களுக்கு திமுகதான் நிரந்தர எதிரி. மற்றவர்கள் அனைவரும் உதிரி. அந்த உதிரிகளில் ஒருவர்தான் குருமூர்த்தி. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்து நாங்கள் மரியாதையாகப் பேசுகிறோம். ஆனால், அவரோ முதலமைச்சரையும் மற்ற அமைச்சர்களையும் ஒருமையில் பேசிவருகிறார்” என்றார்.