மினி பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் நகரில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு இரவு 8 மணிக்கு தனியார் மினி பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்தப் பேருந்து கே.பி.ஆர் நகர் நான்கு வழி சாலை சந்திப்பில் இருக்கும் வளைவு பகுதியில் திரும்ப முயற்சிக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு உள்ள மின் கம்பத்தின் மீது மோதி விட்டது. இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மின்கம்பத்தில் சிக்கிய மினி பேருந்தை அப்புறப்படுத்த முயற்சி செய்தபோது, இரும்பு மின்கம்பம் வளைந்து தீப்பொறி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மின்சார வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து மின்சார வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை தடை செய்து மின்கம்பத்தில் சிக்கிய மினி பேருந்தை மீட்டு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, அங்குள்ள பேக்கரி கடை முன்பு இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் தான் இவ்வாறு விபத்து ஏற்படுகிறது என குற்றம் சாட்டியுள்ளனர். அதோடு அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.