சீன நாட்டில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் சீன நாட்டில் புதியதாக 31,454 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இவர்களில் 27,517 பேருக்கு கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை. இந்த கொரோனா நோய் பாதிப்புகளால், அந்நாட்டில் பெரியளவில் ஊரடங்குகளை விதிக்கவும், அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை நடத்தவும், பயண கட்டுப்பாடுகளையும் விதிக்கவும் அரசு ஆலோசனை செய்து வருகின்றது.
இருப்பினும் இங்கு மக்கள் தொகை 140 கோடிக்கு அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை மிக சிறியளவில் தான் பரவியுள்ளதாக கூறுகின்றனர். இங்கு கொரோனா நோய் தொற்று உச்சத்தை தொட்டதால் மக்கள் தங்கள் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பீஜிங்கில் மால்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற பரபரப்பான பகுதிகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகின்றது.
மேலும் முக்கிய உற்பத்தி மையங்களான சோங்கிங் மற்றும் குவாங்சோ போன்ற பகுதிகளில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குவாங்சோவில் கொரோனா நோய் தொற்றின் பாதிப்புகள் 7,970 ஆக குறைந்துள்ளது என்றும் ஹைஜு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் கொரோனா நோய் தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.