தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 10, 12 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடந்து வரும் நிலையில், மீண்டும் ஒருமுறை வினாத்தாள்கள் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி நடைபெற உள்ள 10ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாள், முன்கூட்டியே இணையத்தில் கசிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை(பிப்..15) நடைபெற உள்ள 12-ம் வகுப்பு உயிரியல் பாட வினாத்தாளும் இணையத்தில் கசிந்து உள்ளது. இதற்கு முன்னதாக 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 2ஆம் தேதி வினாத்தாள்கள் கசிந்து வந்த நிலையில், இன்று மீண்டும் ஒருமுறை வினாத்தாள் கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு மீண்டும் ஓர் வினாத்தாள் கசிந்திருக்கும் நிலையில், தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் வினாத்தாள் வெளியானது குறித்து 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார். ஆகவே வினாத்தாள் கசிவுக்கு காரணமான நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்வு வழிமுறைகளை சரியாக பின்பற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.