அரியலூர் அருகே குக்கிராமம் ஒன்றிற்கு ரூபாய் 2இல் மினரல் வாட்டர் வழங்கி வரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கட கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் கிட்டத்தட்ட 325 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கே வசிக்கக்கூடிய பெரும்பான்மையான மக்கள் விவசாய குடிமக்கள் என்பதால், அவர்கள் குடிப்பதற்கு பெருமளவு நிலத்தடி நீரையே நம்பி இருக்கும் சூழ்நிலை இருந்தது. நிலத்தடி குடிநீர் அத்தனை சுவையாக இல்லாமல் இருந்ததால், அப்பகுதி மக்கள் தேவைக்கு நீர் அருந்தினார்களே தவிர, தாகத்திற்கு அருந்தவில்லை.
இதை உணர்ந்த கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் வல்லியம்மை, அப்பகுதி மக்களுக்கு தற்போது வெறும் இரண்டு ரூபாய்க்கு மினரல் வாட்டர் சேவையை வழங்கி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஊராட்சி மன்ற தலைவரான என் வீட்டில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருப்பதுபோல், ஊர் முழுவதும் இருந்தால் என்னுடைய கிராம மக்கள் தாகம் தீர நீர் அருந்துவார்களே என்று எண்ணினேன். அதோடு மட்டுமல்லாமல்,
தாகத்தைத் தீர்ப்பதில் இருப்பதை விட புனிதம் வேறென்ன? என்பதை உணர்ந்து அரசு ஊராட்சியில் தூய குடிநீர் வழங்கும் திட்டத்தை பயன்படுத்த அரசு அலுவலர்களிடம் போராடி ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் இத்திட்டத்தை செயல்படுத்தி மக்களுக்கு உதவியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதன்படி ரூபாய் 2-க்கு 10 லிட்டர் மினரல் வாட்டரானது கிராம மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கிராம மக்கள் தாகத்தைத் தீர்த்தது மட்டுமின்றி, மினரல் வாட்டரின் ஏக்கத்தையும் தீர்த்துக் கொண்டனர்.