மதுரை மாவட்டத்திலுள்ள காபி மற்றும் டீ வர்த்தக சங்கத்தின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது சங்கத்தின் மாவட்ட நிர்வாகி மீனாட்சி சுந்தரேஸ் பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் ஆவின் பால் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதன் காரணமாக ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆவின் நிறுவனம் ஒரு அரசு சேவை நிறுவனம். அதை தனியார் நிறுவனங்களோடு ஒப்பிட்டு விலையை உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்நிலையில் பால் விலை அதிகரிக்கப்பட்டதால் இம்மாவட்டத்தில் காபி மற்றும் டீயின் விலையை 3 ரூபாய் உயர்த்தி 15 ரூபாயாக விற்பதற்கு முடிவு செய்துள்ளோம்.
அதன் பிறகு பாலின் விலையை குறைப்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதோடு டீ மற்றும் காபியை பேப்பர் கப்புகளில் விநியோகம் செய்வதற்கும் அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து மதுரையை தொடர்ந்து மற்ற மாவட்டங் களிலும் காபி மற்றும் டீயின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலின் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டதால் தான் ஆரஞ்சு பால் பாக்கெட்டுகளின் விலை மட்டும் 12 ரூபாய் வரை லிட்டருக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.