இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைப் பிடிக்க ரெட்மி, ரியல்மி ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டியை நடத்திவருகின்றன.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியிருப்பது சீன நிறுவனங்களான ரெட்மி, ரியல்மி ஆகிய நிறுவனங்களுக்கிடையே நடக்கும் போர்தான்.சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் பட்ஜெட் மற்றும் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன்களுக்காக 2013ஆம் ஆண்டு ரெட்மி என்ற இணை நிறுவனத்தைத் தொடங்கியது. தொடக்கம் முதலே தூள் கிளப்பிய ரெட்மி பட்ஜெட் செக்மென்ட்டின் தனிக்காட்டு ராஜாவாகவே நீண்ட காலம் இருந்தது. ரெட்மியின் அசுர வளர்ச்சியால் கார்பன், மோடோ ஆகிய இந்திய நிறுவனங்கள் மட்டுமில்லாமல் சாம்சங், ஹுவாவே ஆகிய சர்வதேச நிறுவனங்கள்கூட மிட்ரேஞ்ச் செக்மென்ட்டில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முடியவில்லை.

இந்தச் சூழலில்தான் ரெட்மியின் ஆட்டத்தை அடக்க சீனாவின் ஒப்போ நிறுவனம் ரியல்மி என்ற இணை நிறுவனத்தை 2018ஆம் ஆண்டு தொடங்கியது. கடந்த ஆண்டு மே மாதம் வெளியான Realme 1 மாடல், ஒரே மாதத்தில் நான்கு லட்சம் விற்பனை ஆனது. அதைத் தொடர்ந்து வரிசைகட்டி Realme 2, Realme 2 pro, Realme C1, Realme C2, Realme U1 என வெளியிட்டு மாஸ்காட்டியது ரியல்மி.
பொதுவாக ரெட்மி நிறுவனத்தின் அசுர வெற்றிக்கு காரணமே குறைந்த விலையில் அதிக வசதிகள் தருவதுதான். ஆனால், இதைச் சாத்தியப்படுத்த ரெட்மிக்கு இருந்ததோ ஒரே வழிதான். அதன்படி தங்களின் ஸ்மார்ட்போன்களில் அதிக விளம்பரங்களை ரெட்மி நிறுவனம் அனுமதித்து வாடிக்கையாளர்களுக்கு, குறைந்த விலையில் அதிக வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை வழங்கியது.
ரெட்மி ஸ்மார்ட்போன்களில் அதிக விளம்பரங்கள் வருவதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் சில ஆண்டுகளாக விளம்பரங்கள் எல்லை மீறி பயனாளர்களைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. இதற்குப் பயனாளர்கள் கடும் எதிர்ப்பைக் காட்டவே, வேறு வழியின்றி Redmi K20 மற்றும் Redmi K20 pro ஆகிய ஸ்மார்ட்போன்களில் குறைந்த விளம்பரங்கள் வரும் என்று ரெட்மி அறிவித்தது.

ரெட்மியின் இந்த பலவீனத்தைப் பார்த்த ரியல்மி, Realme 1 மூலமாக தனது முதல் அடியை அடிக்கத் தொடங்கியது. ரியல்மி மொபைல் வெளியிட்டு விழா ஒன்றில் பேசிய அதன் தலைவர் மாதவ், ‘We Sell Smartphones… not Ads’ என்று ரெட்மி நிறுவனத்தை நேரடியாகவே தாக்கினார். இதன்மூலம் ரியல்மி தனது எதிரி யார், அவனை வீழ்த்துவது எப்படி ஆகியவற்றைத் தெரிந்துதான் களத்தில் இறங்கியது தெளிவானது.
ரெட்மியின் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் கடும் போட்டியைத் தரும் வகையில் ரியல்மியும் தனது ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனிக்காட்டு ராஜாவாகச் சுற்றிய ரெட்மிக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தாண்டு தொடக்கத்தில் ரெட்மி தனது Redmi K20, Redmi K20 pro என்ற Flagship killers (Flagship killers என்பது சந்தையில் ஏராளமான வசதிகளுடன் அதிக விலையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக குறைந்த விலையில் ஸ்மார்ட்போனைத் தருவது) ஸ்மார்ட்போன்களை வெளியிடவிருந்தது. ஆனால், அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ரியல்மி தனது Realme X என்ற மொபைலை வெளியிட்டு அதிர்ச்சியளித்தது. Redmi K20 விலையை விட Realme X ஐந்தாயிரம் ரூபாய் குறைவு என்பதால் அதன் விற்பனை வேகமெடுத்தது. இது ரெட்மிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.
இதேபோல இந்தியாவின் முதல் 64MP கேமரா ஸ்மார்ட்போனை ரெட்மி அறிவிப்பதற்குச் சில மணி நேரங்களுக்கு முன் 64MP கேமராவைக் கொண்ட Realme XT மொபைலை அறிவித்து செக் வைத்தது ரியல்மி. Realme XT-க்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே சமீபத்தில் வெளியான Redmi Note 8 pro விலையைக் குறைத்து 16 ஆயிரம் ரூபாய் ஆக ரெட்மி நிர்ணயம் செய்ததாக அத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் ரியல்மி இதற்கெல்லாம் அஞ்சுவதாகத் தெரியவில்லை. Realme X2, Reamle XT 730G என்று அடுத்தடுத்த வெளியீட்டுக்குத் தயாராகிவருகிறது. இதேபோல சமீபத்தில், சைபர்-மீடியா ரிசர்ச் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் பயனர்களைத் திருப்திப்படுத்துவதிலும் ரியல்மி (98%) ரெட்மியை (97%) வீழ்த்தியது.
தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பது வழக்கம். அதன்படி ஒரு மாதத்தில் மட்டும் 85 லட்சம் ஸ்மார்ட்போன்களை ரெட்மி, எம்ஐ, போக்கோ ஆகியவை விற்பனை செய்துள்ளது. (ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மட்டும் எவ்வளவு விற்பனை ஆகியுள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை).

ரியல்மி, இதற்கு அருகில்கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு மாதத்தில் ரியல்மி 50 லட்சம் ஸ்மார்ட்போன்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனாலும், தொடங்கப்பட்டு வெறும் ஒரு ஆண்டு மட்டுமே ஆன ஒரு நிறுவனத்துக்கு 50 லட்சம் என்பது ஒரு பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், Counterpoint என்ற தளம் 2019ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டின் ஸ்மார்ட்போன் விற்பனை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு இதே காலாண்டில் சந்தையில் 8.8% ஆக இருந்த சியோமி சிறு சரிவைச் சந்தித்து 8.3% ஆக உள்ளது.

மறுபுறம் ரியல்மி அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு காலாண்டில் வெறும் 0.3% ஆக இருந்த அதன் சந்தை கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு வளர்ச்சியுடன் 2.7% ஆக உயர்ந்துள்ளது. மேலும், சந்தையில் மிக வேகமாக வளரும் ஸ்மார்ட்போனாக ரியல்மி உருவெடுத்துள்ளது.
இருபெரும் நிறுவனங்களுக்கு இடையே நடக்கும் இந்த வர்த்தகப் போரில் அதிக லாபம் என்னவோ வாடிக்கையாளர்களுக்குத்தான். இந்தப் போட்டியின் மூலம் அட்டகாசமான மொபைல்கள் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

மிட்ரேஞ்ச் மான்ஸ்டராக இருந்த ரெட்மியின் ஆதிக்கத்தை அடக்க வந்துள்ள கடைக்குட்டி சிங்கம் ரியல்மி அதில் வெற்றிபெறுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
Sold out in 4 minutes! Thank you for the amazing response to #realmeXT India's first #64MPQuadCameraXpert! Next sale at 00:00 Hrs, 30th September on @Flipkart and https://t.co/reDVoAlOE1.
Know more: https://t.co/ZTgi0RcWj3 pic.twitter.com/PebHn31vrg— realme (@realmeIndia) September 16, 2019