நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363ஆக அதிகரிந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,036 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் இதனை மேலும் நீடிக்குமாறு பல்வேறு மாநில முதல்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனையடுத்து பயணிகள் ரயில் சேவை ரத்தும் மே 3ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ரத்து செய்ய தேவையில்லை. முழு கட்டணமும் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்த நிலையில்ஊரடங்கு நீட்டிப்பால் நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைகளும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.