உடல் நலத்துடன் இருந்தவரை ஃப்ரீசர் பாக்ஸ் உள்ளே வைத்து ஆன்மா பிரிவதாக உயிருக்குப் போராட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார். இவர் தனது தம்பி சரவணன் மற்றும் தங்கை மகள்கள் ஜெயஸ்ரீ, கீதா ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பாலசுப்பிரமணிய குமாரின் தம்பி சரவணன் ஃப்ரீசர் பாக்ஸ் நிறுவனத்திற்கு போன் செய்து தனது அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் இறந்து விட்டதாகவும் அவரது சடலத்தை வைக்க ஃப்ரீசர் பாக்ஸ் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இரவு 7 மணி அளவில் ஊழியர்கள் ஃப்ரீசர் பாக்ஸை கொண்டு வந்து இறந்தவரின் சடலம் எங்கே என்று கேட்டனர். அதற்கு சரவணன் மருத்துவமனையில் இருந்து வந்து கொண்டிருக்கிறது நீங்கள் வைத்துவிட்டு செல்லுங்கள். நாளை பிற்பகலில் வந்து எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினார். இதனை தொடர்ந்து நேற்று ஊழியர்கள் ஃப்ரீசர் பாக்ஸ் எடுக்க சென்றுள்ளனர்.
அப்போது முதியவர் ஒருவர் ஃப்ரீசர் பாக்ஸின் உள்ளே உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனை பார்த்த ஊழியர்கள் அவரை மீட்க முயற்சித்தனர். ஆனால் சரவணன் மற்றும் ஜெயஸ்ரீ ஊழியர்களை தடுத்தனர். இதனால் ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து முதியவரை மீட்க முயற்சித்தபோது சரவணன் காவல்துறையினரிடம் எனது அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் இறந்து விட்டால் அவரது ஆன்மா பிரிந்து கொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக பாக்ஸிலிருந்து முதியவரை மீட்டனர். ஃப்ரீசர் பாக்ஸில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை பார்த்து அவரது ஆன்மா பிரிகிறது என்று சரவணன் மற்றும் ஜெயஸ்ரீ தவறாக நினைத்து உள்ளனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூறுகையில், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் இது போன்ற செயலை செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.