வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில் கல்குவாரியை மூட உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீலாத்திகுளம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஆகாஷ் கடந்த 22-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தான். அங்கு உள்ள கல்குவாரியில் வெடி வைத்த போது வீட்டில் ஏற்பட்ட அதிர்வினால் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தையாக இறந்துள்ளான் என கூறி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து ராதாபுரம் காவல்துறையினர் கல்குவாரியில் வெடி வைத்தவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி சீலாத்திகுளத்திற்கு சென்று இறந்த ஆகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து உதவி கலெக்டர் கல்குவாரிக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் கல்குவாரியை தற்காலிகமாக மூடுமாறும் உத்தரவிட்டுள்ளார். மேலும் வருகிற 30-ஆம் தேதி சேரன்மகாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் கல்குவாரி உரிமையாளரை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கல்குவாரி மூடப்பட்டது.