Categories
மாநில செய்திகள்

வணிகர்களான தந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம்…. தமிழகம் முழுவதும் நாளை ஒரு நாள் கடையடைப்பு…!!

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் சிறையில் மரணமடைந்ததற்கு கண்டனம் தெரிவித்து கடையடைப்பு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் 30ம் தேதி அனைத்து காலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த நிலையில் 22ம் தேதி இரவு தமக்கு அதிகமாக வியர்வை வருவதாக பென்னிக்ஸ் தெரிவித்தார்.

இதையடுத்து சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அரசு மருத்துவமனையில் பென்னிக்ஸ்-ஐ சேர்ந்துள்ளனர். ஆனால் பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து, அவரது தந்தை 23ம் தேதி காலை ஜெயராஜும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இரண்டு எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும், இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தந்தை, மகன் இருவரின் உடலையும் 3 மருத்துவர்களைக் கொண்ட குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்யவும் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு, போலீசார் அடித்து கொன்றதாக ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். எனவே உயிரிழந்த இருவரின் உடல்களை வாங்க உறவினர் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, சாத்தான்குளம் சம்பவத்தில் பிரேத பரிசோதனை மையத்திற்கு கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் வந்து மருத்துவ கல்லூரி முதல்வருடன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பிரேத பரிசோதனைக்கு உறவினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதையடுத்து நேற்று இருவரின் பிரேதபரிசோதனை முடிந்தது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என வணிகர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |