கள்ளக்குறிச்சியில் மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்காக வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறியிருக்கிறார்.
மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டு முதல்வரின், ‘நான் முதல்வன்’ என்னும் திட்டப்படி, கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி குறித்த கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக நடந்த இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது,
மேல்நிலை பள்ளி படிப்பை முடித்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்கும் விதமாக மிகப்பெரிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கவிருக்கிறது. இது, மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுகள், அகில இந்திய நுழைவுத்தேர்வுகள், மத்திய, மாநில அரசுகளின் முதன்மை கல்லூரியில் சேர வழிகாட்டும் நிகழ்ச்சி ஆகும்.
எனவே, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மேலும், மாணவர்கள் காண, கேட்க தகுந்த வகையில் அகலத் திரை வைப்பதோடு, தடையற்ற மின்சாரமும் அளிக்கவேண்டும்.
மேலும், மாணவர்கள் கலந்துரையாட மைக் வசதி செய்து நிகழ்ச்சியை சிறந்த வகையில் நடத்துவதற்கு, அனைத்துத்துறையை சேர்ந்த அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.