16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் கூலித் தொழிலாளியின் மகளான 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமிக்கு ஆனைமலை பகுதியில் வசித்துவரும் மூன்று பேர் செல்போனில் பேசியதால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 14ஆம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்தனர்.
இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமி தன்னை ஆனை மலையில் வசித்து வரும் மூன்று பேர் தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி கடந்த 19ஆம் தேதி மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஆனை மலையில் வசித்து வரும் ரஞ்சித், ஹரிஷ் மற்றும் சூர்யா என்ற மூன்று வாலிபர்களை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். ஆனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று வாலிபர்களும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாதவர்கள் என்று தெரியவந்துள்ளது.