இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதை கைவிட வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதியை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் சென்றது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை 800 எனப் பெயர் சூட்டி திரைப்படம் தயாரிக்கப் படவுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை ஆதரித்து சர்ச்சைக்குரிய கருத்தை அப்போது வெளியிட்ட முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என தமிழ் திரையுலகினரும், அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்ற இளநீர் மூலமான இயற்கை பானம் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார். தமிழர் பாரம்பரிய உடை அணிந்து வந்த அவர் நிகழ்ச்சியில் எதுவும் பேசாததோடு செய்திகளையும் சந்திக்காமல் சென்றுவிட்டார்.
அவரின் இந்த மௌனம் மேலும் பல்வேறு ஊகங்களுக்கு வித்திடும் வகையில் உள்ளது. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் நடிகர் விஜய் சேதுபதி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார் என்றும் நண்பர் என்ற முறையில் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாகவும் குறிப்பிட்டார்.