மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாடலும், நடிகையுமான மீரா மிதுன் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டியில், சில சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது. இதற்கு காரணமான காவல் துறையினர், எனது அடுத்தக்கட்ட நடவடிக்கையால் நிச்சயமாக பணியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அதிரடியாக பேசினார். இந்தப் பேட்டி முடிந்து இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறை அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்களை தரக்குறைவாக பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி நடிகை மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் வைத்து கடந்த 2ஆம் தேதி நடிகை மீரா மிதுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு விஷயங்களை அவர் அதிரடியாகப் பேசினார். அப்போது காவல் துறை அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்களை தரக்குறைவான வார்த்தைகளால் அவர் பேசினார்.
இதுகுறித்து அவரிடம் கேட்ட ஹோட்டல் ஊழியரையும் அவர் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஹோட்டல் ஊழியர் அளித்த புகாரின் பேரில், பொது இடத்தில் ஆபாசமாக பேசியதாகவும் 294(b) ,கொலை மிரட்டல் விடுத்ததாகவும் 506 (1) என இரண்டு பிரிவுகளின் கீழ் மீரா மிதுன் மீது எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே எழும்பூர் காவல் நிலையத்தில் மீரா மிதுன் மீது ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து தற்போது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.