மீன்பிடி பிரச்சினைகள் தொடர்பாக தீர்வு எடுக்கப்படவில்லையெனில் பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து பிரித்தானியா வெளியேறியது. இதனால் மீன்பிடி பகுதிகளை பிரிப்பதில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் பிரச்சினை நிலவி வருகிறது. இந்த நிலையில் இருநாடுகளுக்கு இடையேயான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பின்னர் ஏற்பட்டுள்ள இந்த மீன்பிடி பிரச்சனையை தீர்க்காவிட்டால் பிரித்தானியா மீது பல்வேறு தடை விதிக்கப்படும் என்று பிரான்ஸ் எச்சரிக்கை அளித்துள்ளது.
குறிப்பாக மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு எடுக்கப்படவில்லையெனில் வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி முதல் பிரித்தானியாவுக்கு எதிராக பாரிஸ் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று ஐரோப்பிய விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை செயலாளர் கிளெமென்ட் பியூன் தெரிவித்துள்ளார்.
அதில் பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு முறையான சுங்க மற்றும் சுகாதார சோதனைகள், கடல் உணவுகளை தரை இறக்குவதில் தடை போன்றவை அடங்கும். மேலும் தடைகள் குறித்த பட்டியல் அக்டோபர் 28 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கிளெமென்ட் பியூன் தெரிவித்துள்ளார்.