மன அழுத்தத்தால் மீனவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பகுதியில் மீனவரான சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரவிச்சந்திரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அம்சவள்ளி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கரையூர் தெருவில் வசிக்கும் மாரிமுத்து என்பவரிடம் முன் பணம் வாங்கிக் கொண்டு அவரது படகில் சுந்தர்ராஜ் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுந்தர்ராஜ் மீன் பிடித்து கொண்டிருக்கும்போது படகிலிருந்து தவறி கீழே விழுந்தார். இதனால் சுந்தர்ராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுந்தர்ராஜ் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தார்.
இந்நிலையில் சுந்தர்ராஜ் வீட்டிற்கு வந்த மாரிமுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த சுந்தர்ராஜ் பணம் ஏற்பாடு செய்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெளியே சென்ற சுந்தர்ராஜ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அவரது குடும்பத்தினர் பதற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 23 – ஆம் தேதி வீட்டிற்கு அருகில் உள்ள வேப்பமரத்தில் சுந்தர்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சுந்தர்ராஜ் சடலத்தை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி சுந்தர்ராஜ் மனைவி ரவிச்சந்திரா அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது கணவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் மற்றும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விடபட்டாரா என்பது தெரியவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.