சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்தின் 2-வது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கி வருகிறது. இதில், தூய்மை பராமரிப்பு சின்னத்தின் இரண்டாவது இடமாக மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் தேர்வு செய்யப்பட்டு, மதுரை மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைச் சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 கழிவறைகள், சுழற்சி முறையில் சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் போன்ற பல்வேறு பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் வைஷ்னோ தேவி ஆலயம் முதலிடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.