அரசு பள்ளியில் ஏற்பட்ட மோதலில் மாணவரை கொன்றவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாக்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வசூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இவர் பள்ளகால் புதுக்குடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்துள்ளார். அங்கு மாணவர்களிடையே நடந்த மோதலில் செல்வசூர்யாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து செல்வ சூர்யாவை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வசூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாப்பாக்குடி காவல்துறையினர் மோதலில் ஈடுபட்ட 3 மாணவர்களை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் செல்வசூர்யாவின் தந்தை முருகன், தாய் உச்சிமாகாளி மற்றும் வக்கீல்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில், ‘‘மோதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்ற சம்பவம் மற்ற பள்ளி, கல்லூரிகளில் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து செல்வசூர்யாவின் தாய் உச்சிமாகாளி கூறுவதாவது, ‘‘ எனது மகன் செல்வசூர்யா தலையில் காயம் அடைந்த பிறகு அவனை 2 மணி நேரம் சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல் பள்ளியிலேயே வைத்துள்ளனர். இதனையடுத்து 5 மணிக்கு பிறகுதான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகமும், காவல்துறையினரும் எங்களுக்கு உரிய தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால் எனது மகனின் உயிரை காப்பாற்றிருக்கலாம் என்றும், எனது மகனை தாக்கிய மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.