கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை போலியாக தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்த கும்பல் சீனாவில் சிக்கியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் பாதிப்பு சீனாவில் தான் முதலில் தொடங்கியது. தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது. இதற்கு தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. சீன அரசு சார் நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்கின்றனர். இதற்கிடையே தடுப்பூசி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் சில போலியான மருந்துகளை தயார் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
பீஜிங், ஷாங்காய், ஷாங்தொங் பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 3000 டோஸ் போலி தடுப்பூசிகள் பிடிபட்டன. ஆய்வில், இந்த தடுப்பூசிகளில் மருந்து எதுவும் இல்லை என்றும், வெறும் சலைன் திரவம் மட்டுமே இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றை தயாரித்தது தொடர்பாக, 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதலே, போலி மருந்துகளை தயாரித்து விற்றதும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.