பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டின் தலைவரிடம் மதத் தலைவர்கள் கோரிக்கை ஒன்றை முன்வைக்கவுள்ளனர்.
ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 ஆம் தேதி வரை பருவநிலை மாற்றம் உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பசுமை வீடு வாயுக்கள் என்றழைக்கப்படும் நீராவி, கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை அதிகப்படியாக உமிழப்படுவதை தடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் மற்றும் பல்வேறு மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
மேலும் தங்களது கோரிக்கையை பருவநிலை மாற்றம் உச்சி மாநாட்டிற்கு முன்னரே அதன் தலைவரான அலோக் சர்மாவிடம் அளிக்க திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக அந்தக் கோரிக்கையில் ” நாங்கள் ஒரு பூங்காவை பாரம்பரியமாக வளர்த்து வருகிறோம். அதனை எங்களது குழந்தைகளுக்கு பாலைவனமாக விட்டுச் செல்வதற்கு விரும்பவில்லை.
ஆகவே பருவநிலை மாற்றம் குறித்த பாதிப்புகளை தடுப்பதற்கான குறிக்கோளை அடைவதற்கு அந்ததந்த அரசுகள் உறுதியேற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையானது போப் பிரான்சிஸ், இஸ்லாம், இந்து மற்றும் புத்த மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் போன்றோர் கூட்டாக இணைந்து கையெழுத்திட்டுள்ளனர்.