கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்குக் கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் தற்போது அவரின் மகளுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. முதல் மந்திரியாக எடியூரப்பா இருந்து கொண்டிருக்கிறார். 77 வயது நிறைவடைந்த இவர்தான், பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் அதிக வயதுடைய முதல்-மந்திரி ஆவார். இந்நிலையில் கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், எடியூரப்பா கொரோனா தடுப்பு பணி தொடர்பாக மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரின் இல்லாத அலுவலக ஊழியர்கள் சிலர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். அதனால் அவரை ஐந்து நாட்கள் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.அதன் பிறகு அவர் வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து நேற்று முதல் மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியது. இது பற்றி கர்நாடக மருத்துவக்கல்வி துறை மந்திரி சுதாகர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு பதிவிட்டுள்ளார். அதில், முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக இருப்பதாகவும் அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவதற்கு வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா தனது ட்விட்டர் பதிவில், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் அளித்துள்ளார்.
அதே சமயத்தில் தனக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது கொரோனா பாதிப்பு உறுதியாகி இருப்பதால், என்னுடன் கடந்த சில தினங்களாக தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் படியும், கொரோனா பரிசோதனை மேற் கொள்ளும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பா மகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் அவர் பெங்களூருவில் இருக்கின்ற மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.