திருமணம் முடிந்து காரில் சென்று கொண்டிருந்த மணப்பெண் விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்த சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகின்றது
அமெரிக்காவில் மைண்சோடா பகுதியை சேர்ந்த கால்வின் டெய்லர் என்பவருக்கும் ரேச்சல் என்ற பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்து தம்பதிகள் காரில் சென்று கொண்டிருந்த சமயம் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றி கால்வின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திருமணம் முடிந்து நாங்கள் காரில் சென்று கொண்டிருந்த சமயம் பெண் ஒருவர் சாலையில் விபத்தில் சிக்கி இருந்தார். இதனைக்கண்ட எனது மனைவி ரேச்சல் உடனடியாக எங்கள் காரை நிறுத்தச் சொல்லி விபத்தில் சிக்கி இருந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
என் மனைவி ஒரு செவிலியர். நான் அவசர உதவி எண்ணிற்கு போன் செய்ய மருத்துவ குழு வருவதற்குள் மணப்பெண் உடையில் இருந்த எனது மனைவி முதல் உதவியை கொடுத்து முடித்தார். இப்படி ஒரு மனைவி கிடைப்பதற்கு நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ரேச்சலை நினைத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. விபத்தில் சிக்கிய பெண் தமரா கூறுகையில் “ரேச்சல் தான் எனது உயிரை காப்பாற்றுவதற்கு உதவி செய்தார். அவர் ஆசீர்வதிக்கப்பட்ட தேவதை” என தெரிவித்துள்ளார். திருமணக்கோலத்தில் ரேச்சல் செய்த செயலுக்கு பலரது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.