மார்ச், ஏப்ரல் மாத வாடகையை இரண்டு மாதம் கழித்து பெற்றுக் கொள்ளவேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தினால் அத்தியாவசிய சேவையை தவிர மற்ற அனைத்தும் முடங்கியுள்ளது. இதனால் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் மத்திய மாநில அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள 11 IAS அதிகாரிகள் கொண்ட குழுவுடன் தமிழக முதலமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் பல்வேறு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அதில், கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணை செலுத்த 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சொத்துவரி , குடிநீர் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் வாடகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு அறிவித்த நேரத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.