தண்டவாளத்தில் மரம் சாய்ந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து சிறிது நேரத்திற்கு பாதிப்படைந்தது.
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ரயில் நிலையத்தில் அருகே நின்று கொண்டிருந்த இலவ மரம் தொடர் மழை காரணமாக நேற்று காலை 8 மணியளவில் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. மேலும் மரம் சாய்ந்து விழுந்ததில் ரயில்வே மின்கம்பிகள் அறுந்து தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நிலையம் செல்லும் ரயில் போக்குவரத்து சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இது குறித்து அறிந்த திருவள்ளூர் ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஊழியர்கள் தண்டவாளத்தில் விழுந்த மரத்தை முழுவதாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதிலும் அறுந்து விழுந்த ரயில்வே மின்கம்பிகளை மீண்டும் இணைக்கும் பணியில் தீவிரமாக இறங்கினர். குறிப்பாக மின்சாரத்தை துண்டித்து ரயில்வே ஊழியர்கள் மின்கம்பிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் அதிவேக மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் வேறு மார்க்கமாக திருப்பி அனுப்பப்பட்டன. குறிப்பாக தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் நான்கு மணி நேரம் ரயில் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். குறிப்பாக மதியம் 12 மணியளவில் மரம் முழுவதும் அகற்றப்பட்டு அறுந்து விழுந்த மின் கம்பிகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டது.