லாரி மோதிய விபத்தில் முறிந்து விழுந்த மரம் காரை சேதப்படுத்தி விட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சீராபாளையம் பகுதியில் கால் டாக்சி டிரைவரான வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேஷ் வாடிக்கையாளரை கோவை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு கணபதி நோக்கி சென்றுள்ளார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் இருக்கும் சாலையோர மரத்தின் மீது பலமாக மோதி விட்டது. இதனால் அந்த மரம் முறிந்து வெங்கடேஷின் கார் மீது விழுந்ததால் வாகனத்தின் முன்பகுதி சேதம் அடைந்துவிட்டது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காருக்குள் சிக்கிய வெங்கடேஷை பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மரத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.