முன்விரோதம் காரணமாக தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோள் அப்பட்டுவிள பகுதியில் ரங்கசாமி என்பவர் கூலித் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. எனவே இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கிருஷ்ணனின் மகன் சுபாஷ் மண்வெட்டியால் ரங்கசாமியை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறத. இதில் ரங்கசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதன்பின் ரங்கசாமி தனது வீட்டிற்குள் சென்று தூங்கினார். அப்போது மாலையில் நீண்ட நேரமாகியும் ரங்கசாமி தூக்கத்திலிருந்து எழும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி ரஞ்சிதம் எழுப்பியுள்ளார். ஆனால் அவர் அசைவற்ற நிலையில் கிடந்ததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரங்கசாமியை மீட்டு சாமியார் மடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரங்கசாமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கசாமியின் சடலத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுபாசை வலைவீசி தேடி வருகின்றனர்.