கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் பகுதியில் கடந்த 19-ம் தேதி ஓடும் ஆட்டோவில் குக்கர் வெடி விபத்து சம்பவம் நடந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்து பயங்கரவாத தாக்குதலுக்கான மிகப் பெரிய சதித்திட்டம் என கர்நாடகா டிஜிபி கூறி இருந்தார். அதன் பிறகு ஆட்டோ ஓட்டுனர் ஷாரிக் (22) மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பயங்கரவாத தாக்குதலுக்கு ஷாரிக் மூளையாக செயல்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், அவர் தொடர்புடைய இடங்கள் மற்றும் வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டதில் ஒரு டைரி சிக்கியது. அதில் ஷாரிக் தமிழகத்தில் உள்ள நாகர்கோவில், மதுரை, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு வந்து சென்றதாக இருந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிறப்பு பிரிவு போலீசார் மதுரை மாவட்டத்தில் உள்ள டவுன்ஹால் ரோடு, கட்ராபாளையம் போன்ற பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் கடைகள் போன்றவற்றில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தமிழகத்தில் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததில் ஜமீஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்ததாக என்ஐஏ தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.