மாணவர்களின் செஞ்சிலுவை சங்கம் என்பது ஜே.ஆர்.சி என சுருக்கமாக அழைக்கப்படும் ஜூனியர் ரெட் கிராஸ்
ஒரு மனிதனிடம் நாடு, மொழி, இனம், மதம், நிறம் என வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் உயிர் என்பது சமம். அப்படிப்பட்ட உயிரைக் காப்பதற்காக உருவாக்கப்பட்ட சங்கமே செஞ்சிலுவை சங்கம். ஜே.ஆர்.சி என சுருக்கமாக அழைக்கப்படும் ஜூனியர் ரெட் கிராஸ். 2001 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று குஜராத்தை தாக்கிய நிலநடுக்கத்தை நம்மால் மறந்திருக்க முடியாது. அவர்களின் துயரைத் துடைக்க முதலில் விரைந்துவந்த அமைப்பு அனைத்துலக செஞ்சிலுவை சங்கம்.
அதுமட்டுமல்ல உலகில் இயங்கும் இயற்கை மற்றும் செயற்கை துயரடைய நேர்ந்தால் அங்கு முதலில் சென்று உன்னத கரம் நீட்டும் அமைப்புதான் இந்த செஞ்சிலுவை சங்கம். உலகில் இன்னும் மனிதநேயம் மாய்ந்துவிடவில்லை என்று அன்றாட உணர்த்தும் ஓர் உன்னத அமைப்பு செஞ்சிலுவை சங்கம். இந்த அற்புத அமைப்பை உலகிற்கு தந்தவர் ஜீன் ஹென்றி டியூனண்ட். செல்வந்தராக பிறந்து செஞ்சிலுவை சங்கத்திற்காக தன் சொத்துக்களை செலவழித்து இறுதியில் ஏழையாக இறந்த அந்த உன்னத மனிதரின் பெருமையை பறைசாற்றவே ஒவ்வொரு ஆண்டும் மே 8 ம் நாள் செஞ்சிலுவை தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக செஞ்சிலுவை இயக்கத்தின் கொள்கைகளை நினைவு படுத்துவதற்காகவும், தேவையுள்ள மனிதர்களின் ஒப்பற்ற தேவைகளை பூர்த்தி செய்த தொண்டர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நாம் மனிதநேய பண்பை மழலையின் இருந்தே கற்றுக்கொள்கிறார்கள். அது தொடர்ந்து வளர்ந்திட மாணவர் செஞ்சிலுவை சங்கம் ஊக்குவிக்கிறது. மாணவப் பருவத்திலேயே ஜே.ஆர்.சி மூலம் மனிதநேயப் பண்புகளையும், மற்றவர்க்கு உதவும் மனப்பான்மையும் கற்றுக்கொள்கிறார்கள்.
ஜே.ஆர்.சி அமைப்பு மனிதநேய மதிப்புகளையும், கொள்கைகளையும் ஊக்குவித்து பேரிடர் கால தொண்டு, பேரிடர் கால முன்னாயுத்தம், சமுதாய சுகாதாரம், பராமரிப்பு போன்றவை நோக்கங்களாக கொண்டு செயல்படுகிறது. ஜே.ஆர்.சி மூலம் மாணவர்கள் மனித குலத்தின் மதிப்பு, பாரபட்சமின்மை, நடுநிலைமை, சுதந்திரம், ஒற்றுமை, தன்னார்வ தொண்டு போன்ற பண்புகளை கற்றுக் கொடுக்கிறது. மாணவர்கள் சக மாணவர்களுடன் நட்புறவையும், சமுதாயத்தின் நட்புறவையும் மேம்படுத்த ஜே.ஆர்.சி மிகச்சிறந்த வழித்தடமாக திகழ்கிறது.