கனடாவில் பள்ளி மாணவியை கொலை செய்த 19 வயது மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா என்ற பகுதியில் Chris The King என்ற பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 17 வயதான ஜெனிஃபர் விங்க்ளர் என்ற மாணவி படித்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் 19 வயதான டைலன் தாமஸ் என்ற மாணவன் வகுப்பறைக்குள் புகுந்து ஜெனிஃபரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளான். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெனிஃபர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் பலத்த காயமடைந்திருந்ததால் ஜெனிஃபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பள்ளிக்கு அருகிலுள்ள வீட்டில் டைலன் தாமஸ் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டைலனை கைது செய்தனர்.
மேலும் அவனிடம் நடத்திய விசாரணையில் ஜெனிஃபரும் டைலனும் ஒருவருக்கு ஒருவர் ஏற்கனவே தெரிந்து கொண்டவர்கள் தான் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் டைலன் எதற்காக ஜெனிஃபரை கொலை செய்தான் என்பதற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. இதனால் காவல்துறையினர் டைலனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.