தூத்துக்குடி அருகே 48 ஆண்டு காலம் இன்ப துன்பங்களை சேர்ந்து கடந்த மனைவியின் பிரிவைத் தாளாத கணவர் அவருக்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிபட்டு வருவது நெகிழ்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
முடிவைத்தானேந்தல் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான மாடசாமி என்பவர் மனைவிக்காக கோயில் எழுப்பியவர். கோவா விடுதலை, பாகிஸ்தான் போர் மற்றும் வங்கதேச விடுதலைப் போரில் பங்கேற்ற மாடசாமி வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 48 ஆண்டுகள் கண் அவருக்காகவே வாழ்ந்த வள்ளியம்மை கடந்த 2014ஆம் ஆண்டு உயிர் இறந்துவிட்டார்.
அன்பு மனைவியின் பிரிவு மாடசாமியை மீளாத் துயரில் ஆழ்த்தியது. இதனால் வீட்டு முகப்பில் கோவில் கட்டி மனைவிக்கு அருகிலேயே தனக்கும் சிலை வைத்து நாள்தோறும் வழிபட்டு வருகிறார். வள்ளியம்மை சனிக்கிழமை இறந்ததால் ஒவ்வொரு சனிக்கிழமையும் கருப்பு சட்டை அணிந்து மனைவியின் நினைவில் உருகுகிறார் மாடசாமி. மனைவியின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாட்களில் ஊர் மண்டபத்தில் பொது மக்களுக்கு உணவளித்து வருகிறார். ஒருவர் மீது ஒருவர் மாறாத அன்பு கொண்டு வாழ்ந்த இவர்களின் வாழ்க்கை இளைய தலைமுறையினரை நெகிழ வைக்கிறது.