லண்டனில் ஒரு வருடத்திற்கு முன்பு மனைவியை கொன்ற கணவருக்கு நாளை தண்டனை வழங்கப்படவுள்ளது.
லண்டனில் உள்ள எட்மன்ட் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஹுசைன் யூசுப் இகல் – மர்யன் இஸ்மாயில். கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி ஹுசைன் சாலையில் சென்ற ஒருவரை அழைத்து நான் என் மனைவியை கொலை செய்து விட்டேன் என்று கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் ஹுசைனின் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தனர். வீட்டிற்குள் மர்யன் இறந்து கிடந்தார்.
மேலும் மர்யனின் உடல் முழுவதும் பல காயங்கள் இருந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஹுசைனை கைது செய்து விசாரித்தபோது ஏப்ரல் 5ஆம் தேதியே நான் என் மனைவியை கொலை செய்து விட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் எனக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் என்னை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு வற்புறுத்தினார்.
அதனால் எங்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவள் என்னைத் தாக்கினாள். எனவே நான் தற்காப்பிற்காக அவளை கொலை செய்தேன் என்று கூறியுள்ளார். ஆனால் மர்யன் தாக்கியதாக கூறிய ஹுசைனின் உடலில் எந்த ஒரு காயமும் இல்லை. அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் ஓராண்டாக நடந்து வந்தது. இந்நிலையில் பிப்ரவரி 26ஆம் தேதி ஹுசைனுக்கு என்ன தண்டனை கிடைக்குமென்று தெரியவரும்.