சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில் புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகப்படும்படியாக பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அவர் ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த அமுல்ராஜ்(25) என்பது தெரியவந்தது. உடன் வந்த பெண் காணாமல் போன 13 வயது சிறுமி என்பது உறுதியானது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அமுல்ராஜ் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனை அடுத்து போலீசார் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் அமுல்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.