பிரிட்டனை சேர்ந்த ஒரு நபர் இரவு முழுக்க லிப்டில் மாட்டிக் கொண்ட அனுபவத்தை கூறியிருக்கிறார்.
பிரிட்டனில் இருக்கும் போர்ட்ஸ்மவுத் என்னும் பகுதியில் இருக்கும் பிரபல வர்த்தக மையத்திற்கு இரவு நேரத்தில் அஜிசுல் ரெய்ஹான் என்ற 27 வயது இளைஞர் சென்றிருக்கிறார். அதன்பிறகு, சுமார் 10:45 மணியளவில் மேல் மாடியிலிருந்து லிப்டிற்கு சென்றிருக்கிறார். அதனைத்தொடர்ந்து தரை பகுதிக்கு செல்ல பொத்தானை அழுத்தியுள்ளார். சிறிது தூரம் நகர்ந்த லிப்ட் பாதியில் நின்று விட்டது.
அதிர்ச்சியடைந்த அவர், உடனே அவசர உதவிக்குரிய பொத்தானை அழுத்தினார். எனினும், எந்த உதவியும் கிடைக்கவில்லை. லிப்ட் அறுந்து விழுந்து மூச்சு திணறி இறந்து விடுவோம் என்று எண்ணி உச்சகட்ட பதற்றத்துடன் இருந்துள்ளார். அவசர உதவி இயங்கியிருந்தால் அரை மணி நேரத்திற்குள் அவர் வெளியேறி இருக்கலாம்.
ஆனால், அது செயல்படாததால் சுமார் ஏழு மணி நேரங்களாக லிப்ட்க்குள் இருக்கும் நிலை ஏற்பட்டது. மரண பீதியில் இரவு முழுக்க தவித்திருக்கிறார். அதிகாலை, 5:45 மணியளவில் அந்த வர்த்தக மையத்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் இவரை மீட்டிருக்கிறார். இந்த பயங்கர சம்பவத்திற்கு பின் உளவியல் சிகிச்சை மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதன் பிறகு அந்த பகுதி நிர்வாகம் அவரிடம் மன்னிப்பு கேட்டது. தொழில் நுட்ப பழுது காரணமாக உதவி செய்ய தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், தினமும் நள்ளிரவு நேரத்தில் பாதுகாப்பு காவலர்கள் சோதனை பணியை மேற்கொள்வர். ஆனால் இந்த சம்பவம் நடந்த அன்று அந்த நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் தகுந்த நேரத்தில் சோதனை பணியில் இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.