கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு தனது உண்மையான பெற்றோரை கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் யாவ் சே என்ற கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த யாவ் சேக்கு அவருடைய தாயார் அவரது கல்லீரலை தானமாக வழங்க முன்வந்து ரத்த மாதிரிகளை கொடுத்துள்ளார். ஆனால் யாவ் சேவின் ரத்த மாதிரியானது, அவரது தாயின் ரத்த மாதிரியோடு ஒத்துப்போகவில்லை. இதனையடுத்து தன்னை 28 ஆண்டுகளாக வளர்த்த பெற்றோர் உண்மையான பெற்றோர் இல்லை என்பதை யாவ் உணர்ந்து கொண்டார். அதன் பின் இது குறித்து காவல் நிலையத்தில் யாவ் புகார் அளித்தார். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் யாவ் சே பிறந்த ஹூவாய் மருத்துவமனையில் தான் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு தவறு நடந்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது யாவ் சேவின் உண்மையான பெற்றோர்களுக்கு இவரின் தற்போதைய பெற்றோர்களுக்கு பிறந்த குவோ வீயை மாற்றிக் கொடுத்து விட்டனர். இதனையடுத்து யாவ் சேவின் உண்மையான தாயாரும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த யாவ், தனக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு இழப்பீடு கேட்டு கைபெங் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹூவாய் மருத்துவமனையால் பாதிக்கப்பட்ட யாவ் சே மற்றும் அவரது பெற்றோருக்கு ஒரு மில்லியன் யுவானை இழப்பீடாக வழங்குமாறு கடந்த 8ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி அவருடைய பெற்றோர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், யாவ் சேவிற்கு 8 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் யாவ் சேவின் புற்றுநோய் செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதால் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்தி விட்டனர். இதனால் அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.