அல்ஜீரியா நாட்டில் காட்டுத்தீயை உண்டாக்கியதாக ஒரு நபரை மக்கள் அடித்து கொன்றதால் 49 நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அல்ஜீரியா நாட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து தீவிரமாக பரவியது. இதில் 90 நபர்கள் உயிரிழந்தனர். அப்போது, 38 வயதுடைய ஜமீல் பின் இஸ்மாயில் என்ற இளைஞர் தான் காட்டுத்தீயை ஏற்படுத்தியிருக்கிறார் என்று கிராம மக்களுக்கு சந்தேகம் உண்டானது. இதனால் இஸ்மாயில் காவல்துறையினரிடம் உதவி கேட்டிருக்கிறார்.
உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இஸ்மாயிலை தங்கள் வாகனத்தில் ஏற்றி அழைத்துச்சென்றனர். அப்போது அங்கு வந்த மக்கள் கூட்டம் காவல் துறையினரின் வாகனத்திலிருந்து இஸ்மாயிலை அடித்து இழுத்து கீழே தள்ளி கடுமையாக தாக்கினார்கள். அதனைத்தொடர்ந்து அவரை உயிரோடு எரித்துவிட்டனர்.
இந்த கொடூர சம்பவத்தில் தீயில் கருகி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற காவல்துறையினரும் காயமடைந்தார்கள். இந்த வழக்கில் விசாரணை முடிவிற்கு வந்தது. அதன்படி கைது செய்யப்பட்ட அந்த கிராமத்தை சேர்ந்த 49 நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அல்ஜீரிய நாட்டில் 1993 ஆம் வருடத்திற்கு பிறகு மரண தண்டனை இப்போதுதான் விதிக்கப்படுகிறது. மேலும், 28 நபர்களுக்கு இரண்டு வருடங்களிலிருந்து பத்து வருடங்கள் வரை சிறை தண்டனையும், ஜாமீன் பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.