மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தனக்கும், தனது 11 வயதுடைய தங்கைக்கும் தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது சிறுமிகளுக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரின் தந்தையை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக வேலை பார்ப்பது தெரியவந்துள்ளது. மேலும் மகள் என்று கூட பார்க்காமல் தொடர்ந்து சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் அந்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.