பாய்லர் வெடித்து சிதறியதில் உயிரிழந்தவரின் உடலை காவல்துறையினருக்கு தெரிவிக்காமலேயே உறவினர்கள் தகனம் செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கார்த்திக் ஆலங்குளம் பகுதியில் வல்கனைசிங் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஆலங்குளம் புதுப்பட்டி ரோடு பகுதியில் சொந்தமாக ஒரு குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக் தனது குடோனில் வாகனங்களின் டயர்களுக்கு வல்கனைசிங் மூலம் பட்டன் அமைக்கும் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, மற்ற தொழிலாளர்கள் குடோனுக்கு வெளியில் நின்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக குடோனில் வைக்கப்பட்டிருந்த பாய்லர் திடீரென வெடித்து சிதறியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமலேயே கார்த்திக்கின் உடலை தகனம் செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் காவல்துறையினர் கார்த்திக்கின் உறவினர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.