ஆபாச புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என வாலிபர் 15 வயது மாணவியை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் விஷால் என்பவர் வசித்து வருகிறார். இவர் முகநூல் மூலம் திருநகர் மருதம் கார்டன் பகுதியில் வசிக்கும் தனது நண்பருடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் விஷாலுக்கும் அந்த வாலிபரின் சகோதரியான 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷால் அடிக்கடி பேசியுள்ளார். மேலும் விஷால் அந்த மாணவியின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி விஷாலை திட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த விஷால் உனது படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என அந்த மாணவியை மிரட்டியதோடு, 10 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என கூறியுள்ளார். இவருக்கு உடந்தையாக மேலும் இரண்டு நண்பர்கள் இருந்துள்ளனர். இதுகுறித்து தனது தாயிடம் அந்த மாணவி தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை அடுத்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவியின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஷாலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.