மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் ஜூட் ஆண்டனி ஜோசப். இவர் ஓம் சாந்தி ஓசன்னா, சாராஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மையப்படுத்தி 2018 என்ற தலைப்பில் ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் டெவினோ தாமஸ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்ற நிலையில் பிரபல நடிகர் மம்மூட்டி விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது நடிகர் மம்முட்டி இயக்குனர் ஜோசப்பின் தலையில் முடிகள் கம்மியாக இருந்தாலும் அறிவு நிறைய இருக்கிறது என்று நகைச்சுவையாக கூற அது இணையதளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்து மம்முட்டிக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். அதாவது இயக்குனர் ஜோசப் தலை வழுக்கையாக இருப்பதை தான் மம்முட்டி அப்படி சொன்னதாக பலரும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், இயக்குனர் ஜோசப் நடிகர் மம்முட்டி நகைச்சுவை யாகத்தான் அப்படி கூறினார். சொல்லப்போனால் அவர் அப்படி சொன்னது எனக்கு மிகவும் பெருமை தான்.
எனவே இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி அவரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் மம்முட்டி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் நான் பேசியதற்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களில் கவனமாக பேசுவதற்கு இது ஒரு முன்மாதிரியான நிகழ்வாக அமைந்துவிட்டது என்று வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.