இந்தியாவின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் மணிரத்னத்தின் ‘இருவர்’ இடம்பெற்றிருக்கும் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
மோகன்லால், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், ரேவதி, கௌதமி, தபு, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படம் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்று காவியமாகப் பார்க்கப்படுகிறது. நட்பு, அரசியல், மொழி, கலாசாரம் பற்றி ஆழமாக கருத்து விதைத்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தமிழ்நாடு அரசியலை கண்முன்னே கொண்டுவந்த இப்படத்தில் எம்ஜிஆர் போன்ற தோற்றத்தில் மோகன்லால் நடித்து அசத்தியிருப்பார். மோகன்லாலின் திரையுலக வரலாற்றில் மிக முக்கிய படங்களில் ஒன்றாக இந்தப்படம் இடம்பெற்றுள்ளது.

நீண்டு காலத்துக்குப்பிறகு இருவர் மற்றும் எம்ஜிஆர் குறித்து மனம் திறந்துள்ளார் நடிகர் மோகன்லால். திருவனந்தபுரத்தில் நடந்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அவர், தனது திரையுலக பயணத்தின் அனுபவங்களைப் பகிர்ந்தார்.
அதில் பேசிய மோகன்லால், “முதன் முதலில் மணிரத்னம் என்னிடம் இரண்டு நண்பர்களின் கதை என்றுதான் கூறினார். பின்னர் அது எம்ஜிஆர், கருணாநிதியின் வாழ்க்கைத் தழுவல் என்று கூறப்பட்டது.
எம்ஜிஆருக்கும் எனக்கும் யாதொரு விதத்திலும் சாயல் இல்லை. அதனால் என்னை ஏன் இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தீர்கள் என்று ஒருமுறை மணிரத்னத்திடம் கேட்டேன். அதற்கு அவர், எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை நாம் எடுக்கவில்லை. அவரின் தனிப்பட்ட குணாதிசயங்கள் மட்டுமே, அவரது திரையுலக பயணம், உழைப்பு, அரசியல் உள்ளிட்ட சாயலே இடம்பெறும் என்றார்.

பின்னர் அந்தப்படத்துக்கு நிறைய பிரச்னைகள் வந்தன. சென்சாரில் நிறைய காட்சிகள் நீக்கப்பட்டன. ஆனாலும் மிகச் சிறந்த ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.
இந்தியாவின் சிறந்த நூறு திரைப்படங்கள் பட்டியலில் மணிரத்னத்தின் ‘இருவர்’ நிச்சயம் இடம்பெற்றிருக்கும். சினிமா பற்றி படிக்க விரும்புபவர் எவராக இருந்தாலும் இருவர் பார்க்கக்கூடிய படமாக இருக்கும்.
இருவர் வெளியான பிறகு எம்ஜிஆருடன் இருந்த பலருடனும் எனக்கு நல்ல அறிமுகம் கிடைத்தது. எனக்கும் அவருக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது என்று பலரும் கூறியுள்ளனர்.

நான் ஒரு எம்ஜிஆர் ரசிகன். ஆனால் ஒருபோதும் அவராக மாற நான் முயன்றதில்லை. மணிரத்னத்திற்கு மிகப்பெரிய நன்றி தெரிவிக்கிறேன்” என சுவாரஸ்யமாகத் தெரிவித்தார்.