பறவை காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்காசி, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி ஆகிய கேரளாவின் எல்லையோர மாவட்டங்களின் வழியாக கேரளாவில் இருந்தும் வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கோழி வாத்துக்களின் முட்டை, இறைச்சி, தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புளியரை சோதனைச்சாவடியில் பறவைக் காய்ச்சல் நோய்க்கான தடுப்பு முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இம்முகாம் 90 நாட்கள் நடக்கவிருக்கிறது. கால்நடை மருத்துவர் தலைமையில் 5 பணியாளர்கள் உடைய மூன்று குழுக்களாக இரவு பகலாக 24மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். கேரளாவில் இருந்து வரும் வாத்து,கோழி, பறவை கழிவுகள், முட்டை கொண்டு வரும் வாகனங்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்படுகிறது. மற்ற வாகனங்களின் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.