தமிழகத்தில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டார். இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கிராமசபை கூட்டங்களில் முதலமைச்சர் கலந்துகொண்டது தமிழகத்தின் வரலாற்றில் முதல் முறையாகும். முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கிராம சுயராஜ்யம் மற்றும் கிராமங்களில் தேவைகளை பூர்த்தி செய்வது போன்றவற்றைப் பற்றி பேசியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் இன்றைய காலகட்டத்தில் மது பழக்கம் முக்கிய பிரச்சினையாக உள்ளது. கிராமப்புற பகுதிகளில் ஒரு தெருவிற்கு குறைந்தது மூன்று வீடுகளில் மதுவால் சீரழியும் குடும்பங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் தான் மது பழக்கத்தின் காரணமாக அதிகம் இளம் விதவை மற்றும் அதிக விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதையடுத்து 2019ஆம் ஆண்டு மதுக்கடைகளை மூடுவதற்காக தொடரப்பட்ட வழக்கில் பேசிய நீதிபதிகள், மது பழக்கத்தின் காரணமாக ஒரு தலைமுறையை இழந்துவிட்டோம். அடுத்த தலைமுறை காப்பாற்ற வேண்டுமென்றால் மதுக்கடைகளை மூடுவது குறித்து கிராம சபைக் கூட்டங்களில் ஆலோசனை செய்து அதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை மதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து மதுக்கடைகளை மூடுவதால் தமிழக அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்வதற்காக பாமக மாற்று திட்டங்களை தெரிவிக்கிறது. மக்களாட்சியில் மக்களின் விருப்பமே முக்கியமாகும். அதனால் கிராமப்பகுதிகளில் மக்கள் மது கடைகள் வேண்டாம் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் உடனடியாக கிராம சபையைக் கூட்டி வாக்கெடுப்பு நடைபெற வேண்டும். அதன் பின்னர் அதன் அடிப்படையில் மதுக்கடைகளை மூட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.